சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் சந்தேகப்படும்படியாக அங்கிருந்த பொது கழிவறை அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோட்டில் வசித்து வரும் முருகன் என்பதும், மற்றொருவர் அவரது மகன் செந்தில்குமார் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை வெள்ளை நிறத் துண்டு சீட்டில் எழுதி லாட்டரி சீட்டுகள் போல தந்தை, மகன் இருவரும் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த 300 ரூபாயும், லாட்டரி எண்கள் எழுதப்பட்ட வெள்ளை நிற சீட்டுகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.