கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்துள்ள சென்னியாண்டவர் கோயில் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் லாரி ஓட்டுனராக இருக்கிறார். குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்துவரும் இவருக்கும், இவரது சகோதரர் ஆறுமுகத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவேல் மற்றும் அவரது மூத்த மகன் பிரவீன் குமார் ஆகியோர் மதுகுடித்துவிட்டு போதையில் எலச்சிபாளையம் பகுதியிலுள்ள ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்று சொத்து குறித்து தகராறு செய்துள்ளனர்.
இதில், ஆறுமுகத்தின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அவர்கள் இருவரும் உடைத்துள்ளனர். இதனால் அங்கிருந்த பெண்கள் விபரீதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்று உடனே பயத்தில் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.. இதையடுத்து தகவலறிந்து, பன்னீர்செல்வம் என்ற காவலர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சக்திவேல் மற்றும் பிரவீன்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, அந்த போலீசாரை ஆபாசமாக பேசிய இருவரும் திடீரென அவரை தாக்கியுள்ளனர். இதையடுத்து, பன்னீர்செல்வம் கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சக காவலர்கள் விரைந்து வந்து சக்திவேல் மற்றும் பிரவீன் குமாரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் சோமனூரிலுள்ள அரசு மருத்துவமனையில் குடி போதைக்கான மருத்துவ பரிசோதனை செய்தனர்.. அதைத் தொடர்ந்து, அரசு ஊழியர் மீது தாக்குதல் உள்ளிட்ட 11 பிரிவுகளில் 2 வழக்குகளாக பதிவு செய்து நேற்று காலை நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் அவிநாசி கிளை சிறையிலடைத்தனர்.