கார்களை வாடகைக்கு எடுப்பது போல் நடித்து 3 பேர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு கார் வைத்திருந்தார். இந்நிலையில் தர்மராஜன் விளம்பரத்தை பார்த்து நங்கநல்லூரில் இயங்கி வந்த கம்பெனி ஒன்றில் தனது காரை வாடகைக்கு விட்டுள்ளார். இதனை அடுத்து அந்த நிறுவனத்தினர் சில மாதங்கள் மட்டுமே காருக்கான வாடகை தொகையை அளித்துள்ளனர். அதன்பிறகு உரிமையாளருக்கு வாடகை பணத்தை அவர்கள் கொடுக்கவில்லை. மேலும் அந்த நிறுவனத்தினர் காரின் உரிமையாளருக்கு காரை திரும்பி கொடுக்காததால் அதனை மீட்டு தரும்படி தர்மராஜன் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் இர்பான் மற்றும் அவரது மகனான முகமது பாசில் போன்றோர் உரிமையாளரிடம் காரை வாடகைக்கு எடுத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் தந்தை, மகன் இருவரும் அங்கு டிராவல்ஸ் நடத்தி வரும் சபரீசன் என்பவர் மூலம் தர்மராஜனின் காரை அடமானம் வைத்து விற்பனை செய்துள்ளனர்.
இதில் காவல்துறையினர் இடைத்தரகராக செயல்பட்ட சபரீசனை பிடித்து அவரிடம் இருந்த 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள 8 கார்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் போலி விளம்பரம் மூலம் இதே போன்று 16 கார் உரிமையாளர்களிடம் கார்களை வாடகைக்கு எடுப்பது போல் நடித்து பின் மோசடியில் ஈடுபட்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் இந்த வழக்கில் குற்றவாளியான இர்பான் மற்றும் முகமது பாசில் போன்றோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.