மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ராமலிங்கபுரம் பகுதியில் பாக்யராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற 9 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்த குடும்பத்தினருக்கு சொந்தமான விவசாய நிலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டு கிராமத்தில் இருக்கிறது. இதற்குப் பக்கத்தில் இவரது உறவினரான செல்வம் என்பவருக்கு சொந்தமான நிலமும் இருக்கிறது. இந்த நிலத்தில் காட்டுப்பன்றி மற்றும் எலி தொல்லையை கட்டுப்படுத்தும் பொருட்டு செல்வம் அதனை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் கஞ்சம்பட்டி விவசாய நிலம் பக்கத்தில் உள்ள கால்வாயில் பாக்யராஜும், அருண்குமாரும் மீன்பிடிக்க சென்று உள்ளனர்.
இதனையடுத்து செல்வத்தின் நிலத்தின் வழியாக சென்றபோது, தந்தை மற்றும் மகன் இருவரும் மின்வேலியில் சிக்கி கொண்டனர். இதனால் அவர்கள் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் பாக்யராஜ் மற்றும் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தை, மகன் இருவரின் உடலையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.