சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை மூன்று விஷயத்தை முக்கியமாக தெரிவித்திருந்தது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் அதிக காயம் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கை மூலமாக தெரிய வருகிறது. சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை சரக டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் நீதி தாமதிக்க கூடாது, ஜெயராஜ்- பென்னிக்ஸ் குடும்பத்தினர் நீதிக்காக காத்திருக்கின்றனர் என்ற விஷயத்தை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சிபிஐ விசாரணை துவங்கும் வரை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இந்த வழக்கு விசாரணையை கையிலெடுக்க வேண்டும். உடனடியாக இன்றைக்கே வழக்கு தொடர்பான விசாரணை கையில் எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விரிவான உத்தரவு மதியம் ஒரு மணிக்கு வழங்கப்படும் என்ற கருத்தையும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.