சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என உயநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து விதி முறைகளை மீறி கடை நடத்தி வந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து தூத்துக்குடி எஸ்பி அருண் இன்று நிலை அறிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும், தேவையான நேரத்தில் நீதிமன்றத்தில் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் சிறையின் பதிவேடுகள், மருத்துவ பதிவேடுகளை புகைப்படம் எடுக்க நீதித்துறை நடுவருக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும், நீதிமன்றத்தை குறைவாக யாரும் மதிப்பிட வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களை காவலல்துறையினர் தாக்குவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் ராஜா சிங் என்பவர் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.