கடலூரில் தந்தையை கைது செய்த மனவேதனையில் மகன் காவல்நிலையம் முன் தீ குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் சில நாட்களுக்கு முன் உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் ஹாலோபிளாக் விற்பனையாளரை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வந்த இவரது மகன் அனந்தராமன் நேற்று ஊருக்கு வந்த கையுடன் பெட்ரோல் கேனை கையில் எடுத்து கொண்டு காவல் நிலையம் முன் தீ வைத்துக் கொண்டார்.
பின் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் காவல் நிலையத்திற்குள் ஓட முயன்றுள்ளார். இதையடுத்து அவரை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தந்தை கைது செய்யப்பட்ட மனவேதனையில் அவர் தீக்குளித்தாரா? அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளதா ? என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.