மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி தந்தை, மகள், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டமுடையார் குப்பம் பகுதியில் ஜெகதீஷ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஜா ஸ்ரீ, தருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது குடும்பத்துடன் ஜெகதீஷ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகபுரத்தில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் மீண்டும் தங்களது வீட்டிற்கு புறப்பட்டு திருப்பாச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, இவர்களுக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் ஜெகதீஷ், தனுஜா ஸ்ரீ மற்றும் தருண் ஆகிய 3 பேரும் லாரி சக்கரத்தில் சிக்கி 10 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் விரைந்து சென்று ஜெகதீஷ், தனுஜா ஸ்ரீ, தருண் ஆகியோரின் உடல்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான சத்தியார் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.