தனது மகன்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த தந்தை மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேத்துப்பட்டு பிருந்தாவனம் மூன்றாவது தெருவை சேர்ந்த 70 வயது முதியவர். இவரது இரண்டு மகன்களுக்கும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பிருந்தாவனம் பகுதியில் சுகாதார அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர்.
தான் இருக்கும் பகுதி தடை செய்யப்பட்டதாலும் தனது இரண்டு மகன்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் முதியவர். இதுகுறித்து குடும்பத்தினரிடம் அடிக்கடி மனமுடைந்து கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தூங்க சென்றவர் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு தவிர்த்திருக்கிறார். காலையிலும் மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்துள்ளார்.
குடும்பத்தினர் உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் முதியவருக்கு கொரோனா தொற்று அல்லது வேறு ஏதும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாரா அல்லது மன உளைச்சலினால் மரணம் அடைந்தாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.