பெற்ற மகனை தந்தையே கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோயம்புத்தூர் மாவட்டம் அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் டெம்போ ஓட்டுநரான பழனிச்சாமி. மதுபோதைக்கு அடிமையான பழனிச்சாமி தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தந்தை வேலுச்சாமியிடம் தனது பெயருக்கு சொத்து முழுவதையும் எழுதி வைக்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நன்றாக மது அருந்திவிட்டு தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அவர் உறங்கச் சென்ற நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வேலுச்சாமி தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் பழனிச்சாமியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சத்தமிட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது பழனிச்சாமி உயிரிழந்து கிடந்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் வேலுச்சாமியை கைது செய்ததோடு அவரிடமிருந்த ஆயுதத்தை கைப்பற்றினர். மேலும் பழனிச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.