Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்… சடலமாக தொங்கிய தந்தை… பார்த்து கதறிய குழந்தைகள்..!!

பேச்சை மீறி வேலைக்கு சென்ற மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜசேகரன்-தங்கம் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆன நிலையில் 11 வயதில் ராகுல் என்ற மகனும் 10 வயதில் தனுசியா என்ற மகளும் இருக்கின்றனர். ராஜசேகரன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்  தினமும் நன்றாக குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் அவருக்கு வேலையும் இல்லாமல் இருந்துள்ளது. ஆனாலும் அவ்வப்போது செய்யும் வேலைகளில் கிடைக்கும் பணத்தில் நன்றாக மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

வீட்டிற்கு எந்த பணமும் ராஜசேகரன் கொடுக்காததால் அவரது மனைவி தங்கம் வேலைக்கு செல்ல முடிவு எடுத்துள்ளார். ஆனால் மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாத ராஜசேகரன் உறுதியாக அனுமதிக்க முடியாது என கூறிவிட்டார். ஆனாலும் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்கவும் வீட்டு செலவை சமாளிக்கவும் அதே பகுதியில் இருந்த முந்திரி தொழிற்சாலைக்கு தங்கம் சில நாட்களாக வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராஜசேகரன் மனைவியிடம் சண்டையிட்டு விட்டு பின்னர் தூங்கியுள்ளார். அதன் பிறகு நடு ராத்திரி கண் விழித்த அவர், தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை தேங்காய் வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

அதன் பிறகு மற்றொரு அறைக்கு சென்று தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். திடீரென சத்தம் கேட்டு எழுந்த அவர்களது குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் அம்மா கிடப்பதையும் தூக்கில் அப்பா தொங்கிக் கொண்டிருப்பதையும் கண்டு அச்சத்தில் அலறினர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் விரைந்து வந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த அவர்கள் இருவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |