61 வயதான முதியவர் மாற்றுத்திறனாளி மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் 61 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் இவருடைய மூத்த மகள் கை, கால்களை அசைக்க முடியாமலும், பேச முடியாமலும் மாற்றுத்திறனாளியாக இருக்கின்றார். இந்நிலையில் திருமணம் ஆகாத இந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதுபற்றி அவரது தங்கை அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர்களுடைய தந்தை தான் இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணின் தங்கை புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூலி தொழிலாளியான அவரது தந்தையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.