இரண்டு சிறுவர்கள் கொரோனா தொற்றினால் தனது தாய், தந்தை, பாட்டி என மூவரை பறி கொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனி பகுதியில் தன்ராஜ் என்ற மருந்து கடை உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விபின், சாமுவேல் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து அந்த சிறுவர்களின் பாட்டி பத்மா என்பவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்.
தற்போது விவின், சாமுவேல் என்ற இரண்டு சிறுவர்களும் அவர்களுடைய மற்றொரு பாட்டி சாரதா என்பவரின் பராமரிப்பில் இருக்கின்றனர். இதுகுறித்து சாரதா கூறும்போது, என் மகன் இரண்டு பேரக் குழந்தைகளையும் இன்ஜினியராக்க நினைத்தான் என கண்ணீரோடு கூறியுள்ளார். ஆனால் தற்போது அதனை நிறைவேற்றுவதற்கான வழி தெரியாமல் தான் இருப்பதாக அந்த மூதாட்டி கூறியுள்ளார். இதுகுறித்து அந்த சிறுவர்கள் கூறும்போது, தங்களது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை எனவும், தங்களின் உயர் கல்விக்கு யாராவது உதவ முன் வர வேண்டும் எனவும் சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.