பணம் தர மறுத்ததால் தந்தையை கழுத்தில் மிதித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்துள்ள கோடாங்கிபட்டி பகுதியில் குமார் போஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற மின்வாரிய போர்மேனான இவருக்கு செல்வி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவரது 3-வது மகனான சரவணகுமார் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இதனையடுத்து குமார்க்கு மாதம்தோறும் ஓய்வூதிய தொகை வரும் நிலையில் கடந்த 1-ஆம் தேதி அவருக்கு ஓய்வூதிய பணம் வந்துள்ளது. அப்போது சரவணகுமார் தந்தையிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு குமார் பணம் தர முடியாது என கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சரவணகுமார் தந்தையை அடித்து பலமாக மிதித்துள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குமாரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சரவணக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.