சொத்து தகராறை விசாரிக்கச் சென்ற காவலரை தாக்கிய குத்துவது தந்தை மகன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை அடுத்த இலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது தம்பியான ஆறுமுகம் தனது தாய் தந்தையுடன் கருமத்தம்பட்டி பெரியாண்டவர் கோயில் பகுதியில் வசித்து வரும் நிலையில் சொத்து தொடர்பாக அண்ணன் தம்பி இடையே முன்விரோதம் இருந்ததால் அவ்வப்போது இருவருக்கும் தகராறு ஏற்பவது வழக்கம்.
இந்நிலையில் அண்ணனான சக்திவேல் தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து ஆறுமுகத்தின் வீட்டிற்குச் சென்று சொத்து தொடர்பாக தகராறு செய்ததோடு வாக்குவாதம் முற்றியதில் ஆறுமுகத்தின் வீட்டு கண்ணாடி கதவு உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து ஆறுமுகம் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் பன்னீர்செல்வம் என்பவர் விசாரணை மேற்கொள்ள சென்ற சமயத்தில் சக்திவேலும், பிரவீன்குமாரும் அவரை தகாத வார்த்தையால் திட்டி அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காவலர் பன்னீர்செல்வம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குடிபோதையில் இருந்த சக்திவேலையும் பிரவீன்குமாரையும் கைது செய்து, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.