சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19 ஆம் தேதியன்று தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட போது மரணமடைந்ததை தொடர்ந்து வழக்கு தற்போது நடைபெற்று வந்தது. அந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு உள்துறை அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த 10 நாட்களாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தாலும், தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை அதனால் இந்த வழக்கினை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற பரவலான கோரிக்கை என்பது இருந்து வந்தது.
அதே போல அவர்களை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தற்போது எழும் நிலையில் உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று நேற்று தமிழக முதல்வர் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று காலை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐயிடம் கொடுக்க நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்ற ஒரு விஷயத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்திருந்த, நிலையில் தற்போது இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.