திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தந்தையின் சிலையுடன் மேடைக்கு வந்த மூத்த சகோதரிகளால் தங்கை இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த தொழில் அதிபர் செல்வம்-கலாவதி தம்பதியினர். செல்வம் கடந்த 2012ஆம் ஆண்டு இறந்துவிட்டார். செல்வத்திற்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் இரண்டு மகள்களுக்கு செல்வம் உயிரோடு இருக்கும்போதே திருமணம் நடந்துள்ளது. கடைசி மகளான லக்ஷ்மி பிரபாவுக்கு கிஷோருக்கும் தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தின் போது தந்தை இல்லை என்பதால் லட்சுமி பிரபா மிகுந்த வருத்தத்தில் காணப்பட்டுள்ளார். இதனை அறிந்த லட்சுமி பிரபாவின் மூத்த சகோதரியான புவனேஸ்வரி தனது தங்கையின் வருத்தத்தை புரிந்துகொண்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ரூபாய் 6 லட்சம் செலவில் தனது தந்தையின் உருவத்தை உருவாக்க ஒப்பந்தம் இட்டுள்ளார். அதன்படி பட்டுக்கோட்டையில் நேற்று நடந்த லட்சுமி பிரபாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தந்தையின் முழு உருவத்தை மேடைக்குக் கொண்டு வந்துள்ளார் புவனேஸ்வரி.
இதனை கண்டு லக்ஷ்மி பிரபா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். தந்தைக்கும் முன்னால் மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு தாயின் அருகில் தந்தையின் சிலையை நிற்க வைத்து ஆசீர்வாதத்தை பெற்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.