சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி ஃபாத்திமா நவ.8ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கை சென்னை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து, அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனிடயே ஃபாத்திகமாவின் அலைபேசி பதிவுகள் உண்மைதான் என தடயவியல் துறையினர் உறுதி செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ இயற்கைக்கு மாறான மரணம் என்ற சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜாரானார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ’விசாரணை அலுவலர் விடுமுறையில் இருப்பதால், வரும் திங்கட்கிழமை பார்க்க வர சொல்லியுள்ளனர்.
என் மகள் உயிரிழந்து இதுநாள் வரை கோட்டூர்புரம் காவல் துறையினர் யார் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவில்லை. இதனை ஒரு புகாராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ளேன். என் மகளுக்கு ஏற்பட்ட நிலை, இனி யாருக்கும் ஏற்படக்கூடாது.
சிபிஐ அலுவலர்கள் முறையாக விசாரித்து, குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவார்கள் என நம்புகிறேன். என் மகள் உயிரிழந்ததற்கான காரணம் ஹோம் சிக்னெஸ் என பதிவாகியுள்ளது. அதற்கான முகாந்திரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்றார்.