பழுதான ரேபிட் டெஸ்ட் கிட் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இன்று அனைத்து, மாநில சுகாதார அமைச்சர்களுடன் வீடியோ கான்பரென்ஸ் மூலம் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, சீனா உட்பட எந்த நாட்டிலிருந்து மாநில அரசுகள் பரிசோதனை கருவிகளை வாங்கியிருந்தாலும், தவறான ஆன்டிபாடி சோதனை கருவிகள் அந்த நாட்டிற்கே திருப்பித் அனுப்பப்படும் என கூறினார்.
மேலும் மத்திய அரசு ஆர்டர் செய்த கருவிகளுக்கு இதுவரை ஒரு பைசா கூட செலுத்தவில்லை என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் பரிசோதனைகளை மேலும் அதிகரித்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் இறப்பு விகிதம் குறைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மணிலா அரசுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 31வது நாளாக அமலில் உள்ளது. இந்த நிலையில், நாட்டில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 23,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325லிருந்து 4,749 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனவை கண்டறியும் அதிவிரைவு கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்கள்) துல்லியமான முடிவை அளிக்கவில்லை என்றும், சரியாக வேலை செய்யவில்லை எனவும் மேற்குவங்கம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் புகார் தெரிவித்தன. இதற்கான முறையான விளக்கத்தை இந்திய மருத்துவ கவுன்சில் நேற்று வழங்கியது. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பழுதான கருவிகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி வழங்கப்படும் என தகவல் அளித்துள்ளார்.