சாலையோரம் நின்று கொண்டிருந்த வியாபாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியில் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செங்கல் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமு டிராக்டரில் செங்கலை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்ருகொண்டிருந்துள்ளர். அப்போது ராமநாதபுரம் ஆர்.எஸ். மடை அருகே உள்ள ஐந்தினை பூங்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராமுவின் டிராக்டர் பழுதடைந்துள்ளது. இதனால் டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு எச்சரிக்கைகாக டிராக்டரை சுற்றிலும் செங்கலை எடுத்து வைத்து கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதி வழியாக திருப்புல்லாணிக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி செங்கலை வைத்து கொண்டிருந்த ராமு மீதும் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் காரில் ஓட்டி வந்த கொட்டகை பகுதியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் தனிச்சியம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ராமநாதபுரம் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.