2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்செய்யப்படவுள்ளது. இதனால் அல்வா கிண்டும் நிகழ்ச்சி, நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதியில் நடைபெறும் இந்த அல்வா கிண்டும் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சகத்தின் மற்ற உயர் அலுவலர்கள், எழுத்தர்கள் கலந்துகொள்ளவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும், மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்ய சில நாள்களுக்கு முன், அல்வா கிண்டும் விழா நடைபெறுவது வழக்கம். மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதை, இந்த நிகழ்ச்சி உணர்த்தும். இந்நிகழ்வில் தயாரிக்கப்படும் அல்வாவை நிதி அமைச்சர் ஊழியர்களுக்கு வழங்குவார்.
விழா முடிந்த கையோடு, மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். சுமார் 10 நாள்கள் நடைபெறும் இந்தப் பணியின்போது, மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியே கசிந்துவிடாமல் இருக்க, அதைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உள்பட யாரையும் தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு ஊழியரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.