வீடுகள் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் குப்பை சேகரிப்பதற்கு கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து அரசிடம் அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சியில் இருந்து 5 ஆயிரத்து 249 டன் குப்பைகள் நாளொன்றுக்கு சேகரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் வீடுகளில் குப்பைகள் சேகரிக்கும் பணிக்காக மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 10 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூபாய் 100 வரை கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதேபோல் திருமண மண்டபம் சமுதாய நல கூடங்களில் ரூபாய் 1000 முதல் 1500 வரையிலும் உணவகங்களுக்கு 300 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 300 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையிலும் வணிக உரிமம் கடைகளில் 200 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் வசூலிக்கப்பட உள்ளது. இதேபோல் திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு 5,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.