பெண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் தென்கொரிய விமானப்படை தளபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தென்கொரிய விமானப்படையில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் தன்னுடன் பணிபுரிந்த சக ஆண் அதிகாரி ஒருவருடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அதன் பின் காரில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது அந்த பெண்ணை ஆண் அதிகாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் தனது மேலதிகாரியிடம் கூறியபோது அவர் அந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்ததோடு, அந்த அதிகாரியிடம் சமரசம் செய்து கொள்ளுமாறு கூறியதால் மனவேதனை அடைந்த அந்த பெண் சென்ற மாதம் இறுதியில் தற்கொலை செய்து கொண்டதால் இந்த விவகாரம் வெடிக்க ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து 3 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆண் அதிகாரி மற்றும் அதனை மறைக்க முயற்சி செய்த மேலதிகாரி குறித்து கையெழுத்திடப்பட்ட புகார் ஒன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆண் அதிகாரியை நேற்று முன்தினம் ராணுவம் கைது செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதிபர் மூன் ஜே இன், ராணுவத்துக்கு இந்த விவகாரத்தில் விமானப்படை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது.
இந்த நிலையில் பெண் அதிகாரியின் இந்த தற்கொலை விவகாரத்தில் அவருடைய மரணத்திற்கு விமானப்படையின் தளபதி லீ சியோங் யோங் முழு பொறுப்பு ஏற்ப்பதாக கூறி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து அதிபர் மூன் ஜே இன் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.