அதிகாரிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜின் உத்தரவின் படி ஊழியர்கள் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். இதனையடுத்து பொதுமக்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்டறியும் சமயத்தில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது பொள்ளாச்சி நகரில் வசிக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள் மற்றும் கிருமி நாசினி பவுடர் போன்றவை வழங்கப்படுகின்றன. மேலும் அதிகாரிகள் வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்வதாகவும் கூறியுள்ளனர். இவ்வாறு பரிசோதனை செய்வதற்காக மொத்தம் 28 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு 2-ஆம் கட்ட பரிசோதனை நடைபெறுவதாகவும், இதுவரை 22 ஆயிரம் வீடுகளில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.