இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது அர்ஜென்டினா அணி.
அரபு நாடான கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது 22 வது உலக கோப்பை கால்பந்து திருவிழா. இந்த கால்பந்து தொடரில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்றுகள் மற்றும் நாக் அவுட் முடிவில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவும் இறுதி போட்டிக்கு சென்றது. இந்நிலையில் உலக கோப்பையை யார் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் லூசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இரவு 8:30 மணிக்கு மோதியது.
இப்போட்டி 8:32 மணிக்கு தொடங்கிய நிலையில், ஆட்டத்தின் 22 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷூட் வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்தார் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி. அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 35 வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியா மிரட்டலான 2ஆவது கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து முதல் பாதி முடிந்த நிலையில், அர்ஜென்டினா 2 : 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதையடுத்து 2ஆவது பாதியில் 80வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, அணியின் முதல் கோலை பதிவு செய்தார் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே. தொடர்ந்து மீண்டும் 81வது நிமிடத்தில் கோல் அடித்தார் எம்பாப்பே. அர்ஜென்டினா – பிரான்ஸ் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்ததால் போட்டி சமநிலையானது.
அதன்பின் 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் – அர்ஜெண்டினா அணிகள் 2-2 என சமனில் இருப்பதால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகள் கோல் அடிக்கவில்லை எனில், அணிகளுக்கு தலா 5 பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்படும் என்ற நிலையில், பரபரப்பான கூடுதல் நேரத்தில் அர்ஜெண்டினா அணி கேப்டன் மெஸ்ஸி 3வது கோலை அடிதார். அதேபோல் 116வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே.
முழு நேரமான 120 நிமிடங்களும் முடிவடைந்தது. அர்ஜெண்டினா – பிரான்ஸ் அணிகள் 3-3 என சமனில் இருப்பதால், போட்டி பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. பின் பரபரப்பான பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டினா அணி 4:2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை தோற்கடித்தது. இதனால் 3ஆவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது அர்ஜென்டினா. 36 ஆண்டுகளுக்கு பின்னர் சாம்பியன் பட்டத்தை வென்று அர்ஜென்டினா அசத்தியுள்ளது.
ARGENTINA ARE WORLD CHAMPIONS!! 🇦🇷#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 18, 2022