சென்னை பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை அடுத்த கண்டலூர் அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் மூலம் சென்னை பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் முதற்கட்டமாக 2 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது 3200 கன அடியாக உயர்த்தப்பட்டு திறந்துவிடப்படுகிறது. இதன்படி பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அங்கிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்து விடப்படும்.
அதன்படி கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின் 30-ஆம் தேதி செம்பரம்பாக்கத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு புழல் ஏரிக்கு நேற்றைய தினம் வரை தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு, செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
பூண்டி ஏரியில் அணையின் மொத்த உயரம் 35 அடி ஆகும். அதில் 30.43 அடி தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் செம்பரம்பாக்கம் பூண்டி உள்ளிட்ட ஏரிகளுக்கு இப்போதைக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் தொடர்ந்து தண்ணீர் விடப்படுவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.