இயக்குநர் மேட் ரீவ்ஸ் இயக்கத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன், பேட்மேனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது முதலே பெரும் எதிர்ப்பார்ப்புகள் கிளம்பிய நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இதைப் படத்தின் இயக்குநர் மேட் ரீவ்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். ‘டே ஒன்’, ’த பேட் மேன்’ என்னும் ஹேஷ் டேக்குகளுடன், படத்தின் கிளாப் போர்ட் புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ளார்.
பிரபல பேட்மேன் தொடரின் மறு உருவாக்கமான இந்தத் திரைப்படம் ‘டார்க் நைட்’ திரைப்படத்தின் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டும், பல வில்லன்களைக் கொண்ட கதையாகவும் தயாராகிவருவதாகக் கூறப்படுகிறது. ராபர்ட் பேட்டின்சனோடு, ஜோயி க்ரேவிட்ஸ் கேட் உமனாக இப்படத்தில் தோன்றவுள்ளார்.
முன்னதாக பேட் மேன் கதாபாத்திரம் என்றுமே தன்னை ஈர்த்துவந்துள்ளது என்றும், சினிமாவில் பணம் ஈட்டுவதற்கான ஒரு பாத்திரமாக என்றுமே பேட்மேன் பாத்திரம் தனக்குத் தெரிந்ததில்லை, பேட்மேன் என்றைக்குமே ஹாலிவுட்டின் சிறந்த இயக்குநர்கள், சிறந்த நடிகர்கள் எனப் பலரையும் ஈர்த்த ஒரு அறிவார்ந்த கதாபாத்திரம் என்றும் பேட்டின்சன் தெரிவித்திருந்தார். வருகிற ஜூன் மாதம் 25ஆம் தேதி பேட்மேன் தொடரின் முதல் பாகமான இந்தத் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#DayOne #TheBatman cc: @GreigfraserD pic.twitter.com/kOgcsa6zX3
— Matt Reeves (@mattreevesLA) January 27, 2020