நிதி நிறுவன அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலனியில் முன்னாள் கவுன்சிலரான சிங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதி நிறுவன அதிபரான பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரபாகரனின் மனைவி சுமதி என்பவர் தனது குழந்தைகளோடு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து குடும்பம் நடத்த வருமாறு பிரபாகரன் பலமுறை அழைத்தும் சுமதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரபாகரனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் பிரபாகரன் சடலமாக கிடந்துள்ளார். அதன்பின் அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபாகரன் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.