அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவின்றி தவிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தரப்படும் ரூ.6 ஆயிரத்தில் ரூ.2 ஆயிரம் முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக ரூ.200 வழங்கப்படும். 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாதத்துக்கு கூடுதலாக வழங்கப்படும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.
வீடுகள் தோறும் கூடுதலாக 3 மாதத்திற்கு 8.69 கோடி மக்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும். 100 ஊழியர்களை கொண்ட நிறுவனத்தில், ரூ.15000க்கும் கீழ் 90% பேர் சம்பளம் வாங்கும் பட்சத்தில், இந்த திட்டம் பயனளிக்கும் என்று அவர் கூறினார்.