Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பின்தொடர்ந்து வந்த கார்…. மோதிக் கொண்ட இருதரப்பினர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பைனான்சியரிடம் 25 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் பைனான்சியரான ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஞானசேகரன் தனது நண்பர்களுடன் காரில் குடியாத்தம் பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தார். இதனையடுத்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஞானசேகரன் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை பின் தொடர்ந்தனர். அதன்பின் அந்த காரில் வந்தவர்கள் ஞானசேகரன் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்தனர். இந்நிலையில் அந்த கும்பல் ஞானசேகரனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்கி காரில் வைத்திருந்த 25 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றனர்.

அப்போது ஞானசேகரனின் நண்பர்கள் 4 பேர் கொண்ட கும்பலை காரில் ஏற விடாமல் தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரண்டு கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அதன்பின் ஞானசேகரனின் நண்பர் ஒருவர் சுதாரிப்பாக அந்த கும்பல் வந்த கார் சாவியை எடுத்து மேம்பாலத்திலிருந்து 100 அடி பள்ளத்தில் வீசிவிட்டார். இதனால் அந்த கும்பல் காரில் செல்ல முடியாது என்பதை உணர்ந்து 25 லட்சத்துடன் தப்பி ஓடினர். இதுகுறித்து ஞானசேகரன் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 20 – க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின் அந்த கும்பல் விட்டுச் சென்ற காரை காவல்துறையினர் சோதனை செய்தபோது வழக்கறிஞர் என்ற ஸ்டிக்கர், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொண்ட இரண்டு பதிவு எண்கள் பொருத்திய புதிய நம்பர் பிளேட் இருந்தது.

மேலும் அந்த காரை கைப்பற்றிய காவல்துறையினர் அதிலிருந்த பேன்கார்டுகள், காவலர்கள் பயன்படுத்தும் போலீஸ் தொப்பி, ஆதார் அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஞானசேகரனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சூதாட்டத்தில் வென்ற 25 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் காரில் வந்து கொண்டிருக்கும்போது மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பணத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைதொடர்ந்து சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |