பொது வெளியில் எச்சில் துப்பினால் ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரானா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்காக மத்திய அரசும், சுகாதாரத் துறையும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கான காரணமாக பொதுமக்கள் மத்தியில் சுய கட்டுப்பாடு இல்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை, முக கவசம் அணிவது இல்லை, அதே போல் பொது இடங்களில் முகத்தை மூடி தும்புவதோ, இரும்புவதோ இல்லை.
ஆங்காங்கே எச்சில் துப்பி செல்கிறார்கள். இதன் மூலம்தான் கொரோனா விரைவாக இந்தியாவில் பரவி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன்படி முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிப்பவர்கள் பொதுவெளியில் எச்சில் துப்புவோர்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகளும் மாவட்ட நிர்வாகங்களும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நீலகிரி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரும் மக்கள் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதனை மீறுவோருக்கு ரூ 50 அபராதம் விதிக்கப்படும் எனவும், பொதுவெளியில் எச்சில் துப்பினால் ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.