செல்போனில் சீரியல் பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டிய வாலிபருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கண்ணாடி அருகே செல்போனை வைத்துக்கொண்டு அதில் சீரியல் பார்த்தபடி வாகனத்தை இயக்கியுள்ளார். இதனையடுத்து ஆர்வமாக சீரியல் பார்த்தபடி மோட்டார் சைக்கிள் ஓட்டிய அந்த வாலிபரை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கண்ணப்பன் நகரில் வசிக்கும் முத்துச்சாமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்ப்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்டாண்ட் அமைத்து அதில் செல்போனை வைத்து சீரியல் பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் பார்த்துக்கொண்டே வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காக முத்துசாமிக்கு 1,200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.