அரசின் உத்தரவை மீறி மறைமுகமாக திறக்கப்பட்ட ஜவுளி கடையின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனை அடுத்து மளிகை, காய்கறி, இறைச்சி, மருந்தகம் மற்றும் பழக்கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சலூன், தேனீர் மற்றும் பெரிய நகை, துணி கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழ ராஜவீதி பகுதியில் பல பெரிய ஜவுளி கடைகளில் முன்புறம் உள்ள கதவுகளை பூட்டப்பட்டு வேறு வழியாக வாடிக்கையாளர்களை வரவழைத்து வியாபாரம் நடத்தி வந்ததாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம் முன்னிலையில் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் பெரிய ஜவுளி கடைகள் முன்புறம் அடைக்கப்பட்டு மாற்று வழியில் பொதுமக்களை வரவழைத்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதன்பின் பொதுமக்களை வெளியேற்றிய அதிகாரிகள், விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 8 கடைகளை பூட்டி அதன் உரிமையாளர்களிடமிருந்து 32,000 ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளனர். மேலும் அரசின் உத்தரவை மீறி கடைகள் திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடையின் உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.