நெல்லையில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சுவதற்கு முயன்ற 3 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையிலிருக்கும் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள வீட்டில் வைத்து சாராயத்தை காய்ச்சுவதாக டவுன் உதவி காவல்துறை கமிஷனரான சதீஷ்குமாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் கமிஷனரின் உத்தரவின்படி, தனிப்படை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக வீட்டில் இருந்தவர்கள் காவல்துறையினர் வருவதை பார்த்தவுடன் தப்பி ஓடினர்.
இதனையடுத்து அந்த வீட்டில் காவல்துறையினர் தீவிரமாக சோதனை செய்ததில் சாராயம் காய்ச்ச தேவைப்படுகின்ற பொருள்கள் தயாராக இருந்ததோடு மட்டுமல்லாமல் கத்தி, அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களும் இருந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவும் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த நல்லமுத்துக்குமார் உட்பட 3 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடுகின்றனர்.