காட்டுத் தீயை அணைக்க நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
காட்டுத் தீயினால் மலக்கூட்டாவில் உள்ள மக்கள் கப்பலில் ஏறி கடலுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வானம் ரத்தம் போல் சிவந்து காணப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியது ஒரு பயங்கரமான அனுபவம் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
அங்குள்ள மக்களை மீட்பதற்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்படவுள்ளது. இதுவரை நியூ சௌத் வேல்ஸில் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மலக்கூட்டாவில் காற்றின் திசை மாறியதாலேயே,காட்டுத் தீ மிகவும் மோசமாக பரவியது என உள்ளூர் தீ அணைப்பு சேவை நிறுவனம் ஒன்று விவரிக்கிறது.