காதலை ஏற்க மறுத்த பெண்ணை உயிருடன் எரிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் சேர்ந்தவர் பிலோமினா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் பிலோமினா நெய்வேலி டவுன்ஷிப்பிலிருந்து வடலூருக்கு தினமும் தனியார் பேருந்து ஒன்றில் சென்று வந்துள்ளார்.
அப்போது தனியார் பேருந்து ஓட்டுனருக்கும் பிலோமினாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தில் செல்லும் பிலோமினா பேருந்து ஓட்டுனர் சுந்தரமூர்த்தியிடம் பேசி வந்துள்ளார்.
இதனை தவறாக புரிந்து கொண்ட சுந்தரமூர்த்தி பிலோமினாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து பிலோமினாவிடம் தன் காதலை சுந்தரமூர்த்தி சொல்ல பிலோமினா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் சுந்தரமூர்த்தியுடன் பேசுவதையும் அவர் நிறுத்திவிட்டார்.
இதனால் பிலோமினா மீது ஆத்திரம் கொண்ட சுந்தரமூர்த்தி இன்று காலை வடலூர் பேருந்து நிறுத்தத்தில் பிலோமினாவிற்காக காத்திருந்து அவள் வந்தவுடன் தன்னிடம் பேசுமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில் மறுத்துவிட்டு நடந்து சென்ற பிலோமினாவை பின்தொடர்ந்து கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை பிலோமினா மீது ஊற்றி தீ வைத்து உயிருடன் எரிக்க முயற்சி செய்துள்ளார்.
தீ உடல் முழுவதும் பரவியதால் அலறித் துடித்தார் பிலோமினா. அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பிலோமினா மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இருப்பினும் காயம் ஏற்பட்டதால் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணை உயிருடன் எரிக்க முயற்சித்த சுந்தரமூர்த்திக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து வடலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.