நூல் மில்லில் ஏற்பட்ட தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் செட்டிபாளையம் பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணபதி நகரில் நூல் மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நூல் மில்லில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த மில்லில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு நேர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சு வைத்திருந்த குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் நிர்வாகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு பற்றி எரிந்த தீயை ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் தீயானது மளமளவென பரவி விட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மில்லின் சிமெண்ட் சீட்டை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மில்லில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து மில் உரிமையாளர் கூறும்போது, சுமார் 10 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமானதாகவும், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த 20 தொழிலாளர்களும் உயிர்தப்பினர் எனவும் கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.