மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 9 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் அ.தி.மு.க எம்பியான பி. ஆர். சுந்தரம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஆவார். இவர் தற்போது நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவராகவும், நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் இவருக்கு சொந்தமான மஞ்சள் குடோன் உள்ளது. இந்த குடோனில் சுமார் 9 கோடி மதிப்புள்ள 10,000 மஞ்சள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த குடோனில் திடீரென அதிகாலை 4:00 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பலமாக வீசிய காற்றால் தீயானது மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை தலைமையில் நாமக்கல் தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கையாக அங்கு உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுமார் 7 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு தீயணைப்பு வீரர்கள் போராடி அந்த தீயை அணைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் சுமார் 9 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமாகின.