4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு வனப் பகுதியில் எரிந்த தீயை வனத்துறையினர் அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டை பகுதியில் பல்வேறு அரிய வகை மரங்கள் இருக்கும் பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது. மேலும் இந்த வனப்பகுதியானது கரடி, முயல், மான் போன்ற வனவிலங்குகளின் இருப்பிடமாக திகழ்கின்றது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தினாலும், கடந்த நான்கு மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும் வன பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து வரண்டு போய் இருந்துள்ளது. இதனால் நெருஞ்சிப்பேட்டை அருகே உள்ள எதிர்மேடு என்ற இடத்தில் உள்ள வனப்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது.
அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயானது மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதுகுறித்து மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வனசரகர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனை சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 30 ஏக்கர் பரப்பில் எரிந்த தீயை வனத்துறையினர் அணைத்து விட்டனர். மேலும் இந்த தீவிபத்தில் ஏராளமான அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகி விட்டதாக வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.