நூற்பாலையில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாணிக்காபுரம் ராசா கவுண்டம்பாளையம் பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக அப்பகுதியில் நூற்பாலை நடத்தி வந்துள்ளார். இந்த ஆலையில் 50 தொழிலாளர்கள் ஒரு ஷிப்டுக்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நூற்பாலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதனை பார்த்து பயந்த தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் அந்த ஆலையில் இருந்த பஞ்சு கலவை அறை, பஞ்சு இருப்பு அறை போன்றவற்றில் தீ மளமளவென எந்திரங்கள் மற்றும் பஞ்சு மூட்டைகள் வரை அனைத்து பகுதிகளிலும் பரவி விட்டதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க சிரமப்பட்டனர். இதனை அடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் ஆலையில் எரிநத தீயை அணைத்து விட்டனர். இந்த தீ விபத்தில் 30 லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாகிவிட்டது. மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.