நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான நூல் மில் ஒன்று உள்ள முத்தூர்-காங்கயம் ரோட்டில் இயங்கி வருகிறது. இந்த நூல் மில்லில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்குள்ள மிக்சிங் டிபார்ட்மெண்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகி உள்ளது. ஆனால் அதனை கவனிக்காத ஊழியர்கள் வேலை செய்து கொண்டே இருந்துள்ளனர். இதனை அடுத்து அந்த கரும்புகை தீயாக மாறி கொழுந்து விட்டு எரிந்ததால் பணியில் இருந்த 4 வடமாநில வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீ மளமளவென அறை முழுவதும் பரவி விட்டதால் அவர்களால் அங்கிருந்து தப்பி செல்ல முடியவில்லை. மேலும் அவர்கள் மீதும் தீப்பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் 4 பேரும் எழுப்பிய சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து விட்டனர். அதன்பின் இந்த தீ விபத்தில் ஒடிசாவை சேர்ந்த ராஜூ கிஷோர், ரஞ்சித், ஜான்மேஜாய் கங்காய் மற்றும் பீகாரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் போன்றோரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜூ கிஷோர் மற்றும் ஜான்மேஜாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதோடு இந்த தீ விபத்தில் காயமடைந்த மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளகோவில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.