முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலியூரில் உள்ள கும்பகோணம் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் முந்திரி கொட்டையின் மேல் உள்ள தோட்டில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு அந்த எண்ணெயிலிருந்து மாற்றுப் பொருளாக பவுடர் தயார் செய்யப்படுகிறது. அதன் பின்னர் இந்த பவுடர் வாகன டயர்கள், பெயிண்ட் பிரைட்னஸ் போன்றவைக்கு முக்கிய மூலப்பொருளாக உபயோகப்படுகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு தொழிற்சாலை விட்டு வெளியேறினர். மேலும் இந்த விபத்தில் தொழிற்சாலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த முந்திரி எண்ணெய் மற்றும் முந்திரி தோடு மூட்டைகள் தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, முத்தாண்டிகுப்பம் நெய்வேலி போன்ற பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சுமார் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த தீயை அணைத்து விட்டனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டன.