மயிலாடுதுறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு கூரை வீடுகள் தீ விபத்தில் எரிந்து சாம்பலானதில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே கீழவெளி கிராமத்தில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தராம்பாள் என்ற மனைவியும், ராஜேந்திரன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தங்கராசின் மனைவி சுந்தராம்பாள் ஒரு கூரை வீட்டிலும், அவருடைய மகன் ராஜேந்திரன் ஒரு கூரை வீட்டில் அருகருகே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சுந்தராம்பாள் வீடு நேற்று மதியம் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.இதையடுத்து வீட்டில் இருந்தவர் பதறியடித்து வெளியே வந்துள்ளனர். தீ அருகில் இருந்த ராஜேந்திரனின் கூரை வீட்டிற்கும் பரவியுள்ளது. இதில் இரண்டு வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. இதையடுத்து ராஜேந்திரன் வைக்கோல் போரில் தீ பரவியுள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் 3 மணி நேரமாக போராடி தீயை அணைத்துள்ளனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த பாத்திரங்கள், உணவு பொருட்கள், நகைகள், துணிமணிகள் உள்ளிட்ட பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சேதமடைந்த பொருள்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வருவாய் ஆய்வாளர் சந்திரமோகன், ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள்மணி, கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார், பேரூர் கழக செயலாளர் ரவி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், ராஜமாணிக்கம், பால் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5000, அரிசி, வேட்டி, சேலை, மண்எண்ணெய் ஆகிய பொருள்களை வழங்கி உள்ளனர்.