டிராவல்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று உள்ளது. இதனை அண்ணாதுரை என்பவர் நடத்தி வருகிறார். இந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கோயம்புத்தூரில் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்திற்கு கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கும் பயணம் செய்வதற்காக டிக்கெட் புக்கிங் செய்து தரப்படும். மேலும் பார்சல் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. இப்படி பார்சல் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் நிறுவனத்தின் உள்ளேயே இருப்பு வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அங்கு நேற்று திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த காரணத்தினால் டிராவல்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் அரை மணி நேரம் போராட வேண்டியிருந்தது. இருப்பினும் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் நிறுவனத்தின் பின்புறத்தில் இருந்த 60க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் சிக்காமல் தப்பித்து உள்ளது. ஆனால் டிராவல்ஸ் நிறுவனத்தின் உள்ளிருந்த பார்சல்கள், மின்சாதன பொருட்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் சேதமாகின. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.