பெட்ரோல் டேங்கர் லாரிகள் வெடித்து சிதறிய விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் வடக்குப் பகுதியில் ஒரு பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் 50 பெட்ரோல் டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததில் ஒரு டேங்கர் லாரி மட்டும் திடீரென நேற்று வெடித்து சிதறியுள்ளது. இதில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த டேங்கர் லாரிகளுக்கும் பரவி வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் மொத்தமாக 50க்கும் மேற்பட்ட லாரிகள் வெடித்து சிதறியதில் அப்பகுதி முழுவதும் கரும்புகைகள் சூழ்ந்துள்ளது.
மேலும் அதன் அருகில் இருந்த கடைகள், வாகனங்கள், வீடுகள் அனைத்தும் தீக்கு இறையாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.