சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் நள்ளிரவில் குப்பை கிடங்கு தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ராம் நகர் பவர் ஹவுஸ் அருகில் நகராட்சி பகுதியில் நள்ளிரவில் குப்பை கிடங்கு ஒன்று மளமளவென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் சிறு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்துள்ளனர். ஏற்கனவே அப்பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடிப்பது மற்றும் துர்நாற்றம் வீசுவது ஆகியவற்றால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதோடு, தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் நகராட்சி நிர்வாகம் இந்த குப்பைக்கிடங்கினால் பெரும் விளைவுகள் ஏற்படுவதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.