அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பற்றி எரிந்த தீ விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிலுள்ள யெகாடெரின்பக் என்ற நகரில் ஒன்பது மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீயானது சிறிது நேரத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக பரவி விட்டது. அந்த நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கவனிக்கவில்லை. இதையடுத்து தீ பரவுவதை அறிந்த சிலர் அங்கிருந்து தப்ப முயற்சித்தனர். ஆனால் சில வீடுகளில் அனைத்து பக்கங்களிலும் தீ சூழ்ந்து கொண்டதால் அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சித்தனர். அவர்களின் முயற்சியில் சுமார் 90 பேர் அந்த விபத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் இந்த விபத்தில் ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.