அடுத்தடுத்த வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 19வது வார்டு அம்சா நகர் 1வது தெருவில் வேலு என்று கூலி தொழிலாளி வசித்துவருகிறார். இவர் வேலைக்கு சென்ற சமயத்தில் அவரது குடிசையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீ பற்றி விட்டது. அப்போது அவரது குடிசையில் தீ எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் அந்த தீயை அணைக்க முடியவில்லை. அந்த சமயம் வேலுவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து சுமார் 15 அடி உயரத்திற்கு மேலே பறந்து கீழே விழுந்து விட்டது.
இதனையடுத்து அந்த தீயானது அருகில் உள்ள அவரது சகோதரர் வீடான பொன்னுரங்கம் என்பவரது வீட்டிலும் பரவியது. இதனை தொடர்ந்து அங்குள்ள சரவணன், அம்சா, ரங்கநாதன் ஆகியோரின் வீடுகளுக்கும் தீயானது வேகமாக பரவி விட்டது. இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதோடு அப்பகுதியில் மின்சாரத்தை மின் வாரிய அதிகாரிகள் துண்டித்து விட்டனர். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவி மாவட்ட அலுவலர் ராஜ்குமார் தலைமையில் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் ஐந்து குடிசைகளும் முழுவதுமாக எரிந்து விட்டது. ஆனால் குடிசையில் இருந்த துணிமணிகள், சாமான்கள், கட்டில், பீரோ, டிவி, இரண்டு தையல் இயந்திரங்கள், நான்கு சைக்கிள்கள், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்ற அனைத்து பொருட்களும் தீக்கிரையானது, இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் பெருமாள் மற்றும் திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அவர்களுக்கு வேட்டி, சேலை, அரிசி மற்றும் நிதி போன்றவற்றை வழங்கி விட்டு சென்றனர்.