சாய ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ரோடு பகுதியில் குமார், சேகர் என்ற இருவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனியில் ஒரு சாய ஆலையை நடத்தி வருகின்றனர். இந்த ஆலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது துணிகளுக்கு சாயம் ஏற்றப் அதிகளவு ஆர்டர்களை பெற்ற இந்த நிறுவனம், துணிகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருந்தது. இந்நிலையில் சில தொழிலாளர்கள் நிறுவனத்தின் அருகே உள்ள அறையில் தங்கி இருந்தபோது, திடீரென சாலையில் இருந்து கரும்புகை வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக உரிமையாளருக்கும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டனர்.
அச்சமயம் நிறுவனத்தின் உள்ளே அதிகளவு துணி வைக்கப்பட்டிருந்ததால் அவை மேற்கூரை உடன் சேர்ந்து மளமளவென தீப்பிடித்து எரிந்தன. இச்சம்பவம் குறித்து உடனடியாக வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன் பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த தீயை அணைத்து விட்டனர். இந்த தீ விபத்து விடுமுறை நாளில் நடந்ததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. மேலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என தீயணைப்பு வீரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் துணிகள் அனைத்தும் தீக்கிரையானது.