ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை-நாகூர் சாலையில் காடம்பாடி பகுதியில் ஆயுதப்படை மைதானம் உள்ளத. அங்கு இயங்கி வந்த வெளிப்பாளையம் காவல்நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை கோர்ட் வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த மைதானத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மொத்த மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.